Pages

Thursday, April 24, 2014

12 மாநிலங்களில் 121 தொகுதிகளில் இன்று விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு

12 மாநிலங்களில் 121 தொகுதிகளில் இன்று விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு
12 மாநிலங்களில் 121 தொகுதிகளில் இன்று விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு
புதுடெல்லி, ஏப். 17–

பாராளுமன்றத்துக்கு 9 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. முதல் கட்ட ஓட்டுப்பதிவு கடந்த 7–ந்தேதி தொடங்கியது. இதுவரை 111 தொகுதிகளுக்கு 4 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இன்று (வியாழக்கிழமை) 5–வது கட்ட தேர்தல் நடந்து வருகிறது.

கர்நாடகா (28), ராஜஸ்தான் (20), மராட்டியம் (19), உத்தரபிரதேசம் (11), சத்தீஸ்கர் (3), பீகார் (7), ஜார்க் கண்ட் (6), மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம் (10), ஒடிசா (11), காஷ்மீர் (1), மணிப்பூர் (1) ஆகிய 12 மாநிலங்களில் உள்ள 121 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. இன்று காலை 7 மணிக்கு இந்த தொகுதிகளில் ஓட்டுப் பதிவு தொடங்கியது.

121 தொகுதிகளிலும் சுமார் 20 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதிகாலை 6.30 மணிக்கெல்லாம் ஏராளமான வாக்காளர்கள் ஆர்வமுடன் ஓட்டுச்சாவடிகள் முன்பு திரண்டனர். வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்ததால் 121 தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு காலை முதலே விறு விறுப்பாக காணப்பட்டது. பீகார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மாநிலங்களில் மாவோயிஸ்டுகளின் கடும் அச்சுறுத்தலையும் மீறி மக்கள் அதிகமாக வந்து வாக்களித்தனர்.

ஓட்டுப்பதிவு முழுமையாக வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. ஓட்டுப் பதிவை இடையூறு இல்லாமல் நடத்தி முடிக்க தலைமை தேர்தல் கமிஷன் விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தது. இதன் காரணமாக 121 தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்து வருகிறது. 10 மணி நிலவரப்படி காஷ்மீரில் 18 சதவீத ஓட்டுக்கள் பதிவாகி இருந்தது. மராட்டியத்தில் 16 சதவீத ஓட்டுக்கள், ஒடிசாவில் 15 சதவீத ஓட்டுக்கள், ராஜஸ்தானில் 14 சத வீத ஓட்டுக்கள், உத்தரபிர தேசத்தில் 12 சதவீத ஓட்டுக்கள் பதிவாகி இருந்தது. மராட்டிய மாநிலம் புனே பாராளுமன்ற தொகுதிக் குட்பட்ட சாம்ராவ் கல்மாடி பள்ளியில் வாக்குப்பதிவு தொடங்கிய போது மின்னணு எந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் அந்த ஓட்டு காங்கிரஸ் வேட்பாளருக்கு விழுந்தது. வாக்காளர்கள் புகார் கூறியதைத் தொடர்ந்து அந்த வாக்குச்சாவடியில் ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது.

பிறகு வேறு எந்திரம் கொண்டு வரப்பட்டு ஓட்டுப்பதிவு தொடங்கியது. ஒடிசா மாநிலத்தில் இன்று பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் நடந்து வருகிறது. அம்மாநிலத்தில் மொத்தம் உள்ள 21 பாராளுமன்ற தொகுதிகளில் 10 தொகுதிகளுக்கும் 147 சட்டசபை தொகுதிகளில் 70 தொகுதிகளுக்கும் கடந்த 10–ந்தேதி முதல் கட்ட தேர்தல் நடந் தது. மீதமுள்ள 11 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 77 சட்ட சபை தொகுதிகளுக்கும் இன்று 2–வது கட்டமாக ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது.

அம்மாநிலத்தில் பல தொகுதிகள் பதற்றமான வைகளாக கண்டறியப்பட்டிருந்ததால் 406 கம்பெனி மத்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 12 மாநிலங்களிலும் இன்று மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. அதன் பிறகு மின்னணு எந்திரங்கள் ‘‘சீல்’’ வைக்கப்பட்டு, ஓட்டு எண்ணப்படும் இடங்களுக்கு கொண்டு சென்று பலத்த பாதுகாப்புடன் வைக்கப்படும்.

பாராளுமன்றத்துக்கு நடத்தப்படும் 9 கட்ட தேர்தலில் இன்று நடக்கும் 5–வது கட்ட தேர்தல் பல வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 9 கட்டங்களில் இன்று தான் அதிகபட்சமாக 121 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. எனவே பாரதீய ஜனதா, காங்கிரஸ் கட்சிகளின் அதிக வெற்றி – தோல்வி இன்று வாக்காளர்களால் தீர்மானிக்கப்பட உள்ளது.

கடந்த 2009–ம் ஆண்டு தேர்தலில் இந்த 121 தொகுதிகளில் பா.ஜ.க. 44 இடங்கள், காங்கிரஸ் 37 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. பிஜு ஜனதா தளம்–9, சிவ சேனா–5, ஐக்கிய ஜனதா தளம்–5, தேசியவாத காங்கிரஸ்–4, சமாஜ்வாதி–4, இடது சாரிகள்–4, மதச்சார் பற்ற ஜனதா தளம்–3, மற்ற வர்கள்–6 இடங்களில் வெற்றி பெற்றிருந்தனர். இந்த தடவை 121 தொகுதிகளில் 60–க்கும் மேற்பட்ட இடங்களை பா.ஜ.க. கைப்பற்றும் என்று ஏற்கனவே வெளியான கருத்து கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது.

எனவே இன்று நடக்கும் தேர்தல் பா.ஜ.க.வுக்கும், நரேந்திர மோடிக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. காங்கிரசை பொருத்த வரை இன்று தேர்தலை சந்திக்கும் 12 மாநிலங்களில் கர்நாடகா மாநிலம் மட்டுமே அந்த கட்சிக்கு கை கொடுப்பதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இன்று ஓட்டுப்பதிவு நடந்து வரும் 121 தொகுதிகளிலும் 1769 பேர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். இவர்களில் 465 பேர் கோடீசுவர வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று தலைவிதி நிர்ணயிக்கப்படும் வேட்பாளர்களில் மத்திய மந்திரிகள் சுசீல் குமார் ஷிண்டே, வீரப்ப மொய்லி, சச்சின் பைலட், மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் பிரதமர் தேவேகவுடா, முன்னாள் முதல்–மந்திரிகள் எடியூரப்பா, சதானந்த கவுடா, குமாரசாமி, முன்னாள் மத்திய மந்திரிகள் மேனகாகாந்தி, ஜஸ்வந்த் சிங் ஆகியோர் முக்கியமானவர்கள். இந்தியாவின் நம்பர்–ஒன் பணக்கார வேட்பாளரான நந்தன் நிலேகனியும், பா.ஜ.க. மூத்த தலைவர் அனந்தகுமார் நேருக்கு நேர் மோதும் பெங்களூர் தெற்கு தொகுதியிலும் இன்று விறு விறுப்பான ஒட்டுப்பதிவு நடந்து வருகிறது.

அது போல ராஷ்டீரிய ஜனதா தளம் தலைவர் லல்லு பிரசாத் யாதவின் மகள் மிசா பார்தி போட்டியிடும் பாடலிபுத்ரா தொகுதியிலும் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக காணப்படுகிறது. இன்றைய தேர்தலுடன் சுமார் பாதி தொகுதிகளில் ஓட்டுப்பதிவு முடிகிறது. இன்னும் 4 கட்ட தேர்தல் நடை பெற வேண்டியதுள்ளது. அடுத்து 6–வது கட்டமாக தேர்தல் வருகிற 24–ந்தேதி நடத்தப்படுகிறது. அன்று தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெறும். 7–வது கட்ட தேர்தல் ஏப்ரல் 30–ந்தேதி 9 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கு நடை பெறும்.

8–வது கட்ட தேர்தல் மே 7–ந்தேதி 7 மாநிலங்களில் உள்ள 64 தொகுதிகளுக்கு நடைபெறும். 9–வது கட்ட தேர்தல் மே மாதம் 12–ந் தேதி 3 மாநிலங்கள் உள்ள 41 தொகுதிகளுக்கு நடைபெறும். அதன் பிறகு 3 நாட்கள் கழித்து 16–ந்தேதி நாடெங்கும் ஓட்டு எண்ணிக்கை நடை பெறும்.

http://www.maalaimalar.com/2014/04/17080942/parliamentary-elections-pollin.html

No comments:

Post a Comment